திருவாரூர் : கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், கொடிய பனியிலும், கடும் குளிரிலும், சட்டம் ஒழுங்கு மற்றும் இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளின் போதும் தன் குடும்பத்தையும் மறந்து நம் தேசத்திற்காக பணிபுரிந்து உயிர் நீத்த காவல்துறை காவல் வீரர்களை தலை வணங்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21 அன்று தேசிய “நீத்தார் நினைவு தினம்” அனுசரிக்கப்படுகிறது.அதன்படி (21.10.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc,.(Agri), அவர்கள் தலைமையில் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள நினைவு தூணில் காவல் துறையில் பணிபுரிந்து பணியிலிருக்கும் போது நாட்டிற்காக தன் உயிரை விட்ட தியாகச் செம்மல்களுக்கு “நீத்தார் நினைவு தினம்” அனுசரிக்கப்பட்டது.
மேலும் தன் வீட்டைப் பார்க்காமல் நாட்டிற்காக நம் நாட்டின் எல்லையிலும், நாட்டிற்குள்ளும் சமூக விரோதிகளின் சட்ட விரோத செயல்களை தடுப்பதற்காக தன் உயிரையேக் கொடுத்து நம் நினைவில் வளர்ந்து கொண்டிருக்கும் காவல்துறையைச் சேர்ந்த காவல் வீரர்களின் ஆன்மாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri), அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சைபர் கிரைம்) திரு.V.அருள்செல்வன் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரியும் துணைக்காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர்களின் முன்னிலையில் காவல்துறையின் சம்பிரதாய முறைப்படி துப்பாக்கி குண்டுகள் வானை நோக்கி முழங்க இந்தியா முழுவதும் இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் நீத்தார் நினைவு தின அணிவகுப்பில் திருமதி.கோகிலா, ஆய்வாளர் ஆயுதப்படை தலைமையில் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் பங்குபெற்று அணிவகுத்து 48 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.