சென்னை : தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந் தேதி முதல் 20-ந் தேதி, வரையிலான ஒரு வார காலத்துக்கு, இந்தியா முழுவதுமாக தீ தொண்டு வாரம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு ”தீ பாதுகாப்பை அறிவோம், உற்பத்தியை அதிகரிப்போம்” என்ற தலைப்பில் விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகளில் தீ விபத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் துண்டு பிரசுரம், வினியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில், நேற்று மாலை நடைபெற்ற தீ விபத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு வினாடி வினா, போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தீயணைப்பு மீட்பு பணித்துறை வடக்கு மண்டல இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தென் சென்னை மாவட்ட தீயணைப்பு அதிகாரி சையது முகமது ஷா, சென்னை புறநகர், மாவட்ட தீயணைப்பு அதிகாரி இ.பாலசுப்பிரமணி, மத்திய சென்னை மாவட்ட தீயணைப்பு அதிகாரி ப.சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.