சென்னை : சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் சதீஷ் (35), இவர் நேற்று பகலில் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு வந்து, திடீரென்று தலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அவரை அங்கு காவலுக்கு நின்ற காவல் துறையினர், தீக்குளிக்க விடாமல் காப்பாற்றினார்கள். தி.மு.க. பிரமுகரான இவர், கவுன்சிலர் ஒருவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி குறிப்பிட்ட கவுன்சிலர் ரூ.18 லட்சம் வாங்கியதாகவும், 6 பேரிடம் வாங்கி அந்த பணத்தை கொடுத்ததாகவும், தற்போது வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும், குறிப்பிட்ட கவுன்சிலர் மீது புகார் கொடுத்தும், காவல் துறையினர், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சதீஷ் தெரிவித்தார். மேலும் அந்த கவுன்சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், அதனால் வேறு வழியின்றி தீக்குளிக்க வந்ததாகவும் சதீஷ், காவல் துறையினரிடம் கூறினார். அவரை வேப்பேரி காவல் துறையினர், விசாரணைக்கு அழைத்து சென்றனர். உரிய நடவடிக்கை எடுக்க வேளச்சேரி காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காவல் ஆணையர் அலுவலகத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.