திருப்பத்துார் : திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்குள், புகுந்த கும்பல், சிகிச்சையில் இருந்த தொழிலாளியை, ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திக்கொன்றது. திருப்பத்துார், கலைஞர் நகர் மற்றும் டி.எம்.சி., காலனி பகுதிகளை சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையே, சில மாதங்களுக்கு முன், மாடு விடும் விழாவில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கலைஞர் நகரை சேர்ந்த தொழிலாளி முகிலனை, (21), டி.எம்.சி., காலனியை சேர்ந்த நான்கு பேர் கத்தியால் குத்திவிட்டு தப்பினர். திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் முகிலன் சேர்க்கப்பட்டார்.
அங்கும் வந்த நான்கு பேர், கத்தியால் முகிலனின், வயிற்றில் குத்தினர். தப்பியோட முயன்றவரை, மருத்துவமனை வளாகத்தில் ஓட ஓட விரட்டி, கத்தியால், குத்தி கொலை செய்தனர். இதனால் நோயாளிகள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து திருப்பத்துார், டவுன் காவல்துறையினர், விசாரனை நடத்தி வருகின்றனர்.