திருநெல்வேலி: தமிழ்நாட்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக தமிழ்வளர்ச்சித்துறையேனும் தனித் துறை தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இத்துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ் வளர்ச்சி குழு தமிழகம் முழுவதிலுமுள்ள அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து தமிழில் அலுவல்களை நடத்த அறிவுரை வழங்கியும் சிறப்பாக செயல்பட்டு வரும் அலுவலகங்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி வருகிறது.
இதன்படி 2019-ம் ஆண்டில் ஆட்சி மொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்த மாவட்ட நிலை அலுவலகமாக திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்படும் தனி விரல் ரேகை பதிவு கூடம் தேர்வாகி உள்ளது. இதற்கான சான்றிதழ் மற்றும் கேடயங்களை இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.விஷ்ணு, இ.ஆ.ப அவர்கள், தனி விரல் ரேகை பதிவு கூடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.சீனியம்மாள்,அவர்களிடம் வழங்கினார்.
மேற்படி தமிழ் ஆட்சி மொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்த மாவட்ட நிலை அலுவலகமாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கேடயம் மற்றும் சான்றிதழ்களை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், இ.கா.ப அவர்களிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இதுபோல் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு பல்வேறு விருதுகள் பெற வேண்டுமென்று வாழ்த்து கூறினார்.அப்போது தனி விரல்ரேகை பதிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. சீனியம்மாள், விரல்ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்கள் திரு.நடராஜன், திரு.ரமணிதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.