திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் தற்போது ஒரு செய்தி பரப்பப்படுகிறது. அந்தச் செய்தியில் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவனை சாதாரண உடையில் வந்த இரண்டு காவலர்கள் சந்தேகப்பட்டு அடித்து காயப்படுத்தியதாகவும் அவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தி பரப்பப்படுகிறது. ஆனால் இச்செய்தி முற்றிலும் தவறாக மிகைப் படுத்தப்பட்ட ஒன்றாகும். நடந்தது என்னவெனில் நேற்று முக்கூடல் பேருந்து நிலையத்தில் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சசிகலா என்பவரின் செல்போன் மற்றும் பர்ஸ் காணாமல் போனதாக புகார் அளித்ததால் அதன் பேரில் விசாரணை நடத்த இரண்டு காவலர்கள் சாதாரண உடையில் அங்கு சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்வையிட்ட போது சிறுவன் ஒருவன் சந்தேகப்படும்படி நிற்பது தெரிய வந்தது.
அச்சிறுவனை அழைத்து விசாரணை செய்த பின்னர் அவரது தாயாருடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். காவலர்கள் யாரும் அச்சிறுவனை தாக்கவோ துன்பப்படுத்தவோ இல்லை. ஆனால் இதனை மிகைப்படுத்தி தவறான ஒரு செய்தியை வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறான செய்தியாகும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்