திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையிலும், பொது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் பதிவுகள் வெளியிடப்பட்ட குற்றத்திற்காக, மாவட்டம் முழுவதும் இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு
வழக்குகளில் தொடர்புடைய 2 நபர்கள் கைது செய்யப்பட்டும் இதில் தொடர்புடைய 2 இளஞ்சிரார்களும் கையகப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வன்முறையை ஊக்குவிக்கும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயலிலும், தவறான பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிடும் நபர்களை திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மரு. V. பிரசண்ண குமார் இ.கா.ப., இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் தொடர்புடைய மற்ற நபர்களை கண்டறிந்து கைது செய்ய நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது பொறுப்புடன் செயல்பட்டு, வன்முறையை தூண்டும் அல்லது சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையிலான பதிவுகளை பகிர்வதையோ பரப்புவதையோ தவிர்க்குமாறு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்கிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















