திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில். பெண்கள் மீதான தொடர்ச்சியான தொல்லை மற்றும் அச்சுறுத்தல்களை தடுக்கும் வகையில், தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் புதிய திருத்தமான பிரிவு 7(சி) அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், மாவட்ட காவல் துறையால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் படி, சுத்தமல்லி, சீதபற்பநல்லூர் மற்றும் சிவந்திப்பட்டி காவல்நிலையத்துக்குள்பட்ட 5 நபர்களுக்கு எதிராக திருநெல்வேலி கோட்டாட்சியரால் 1 ஆண்டுக்கான பாதுகாப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவர்கள், பாதிக்கப்பட்ட பெண்களை மீண்டும் பின் தொடர்தல், நேரடியாகவோ மறைமுகமாகவோ தொந்தரவு செய்தல், அச்சுறுத்துதல், இணைய வழியில் தொடர்பு கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கலாம் என சட்டம் வழிவகுக்கிறது.
இத்தகைய தடுப்பு நடவடிக்கைகள், பெண்கள் மீதான குற்றங்களை விரைவாக கட்டுப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கும் உதவுகிறது. திருநெல்வேலி மாவட்ட காவல் துறையால், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என அதில் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்