மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் விதமாக நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial Monitoring Committee) அமைக்கப்பட்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் படி நிலைகளில் நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் பொறுப்பில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய வழக்குகளின் நீதிமன்ற விசாரணைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் சமயநல்லூர் உட்கோட்டம், சோழவந்தான் காவல் நிலையத்தில் கடந்த 2020ம் வருடம் தாக்கலான குற்ற எண் 1803/2020, U/s 457, 380, 34 IPC திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட சோழவந்தான் காவல் நிலைய சரித்திர பதிவேட்டு குற்றவாளியான சோழவந்தானை சேர்ந்த 1) கார்த்திக் @ சுண்டு கார்த்திக், வயது (20). த/பெ முருகன் மற்றொரு குற்றவாளியான 2) வீரமணி வயது (23). த/பெ செல்வம், என்பவர்களுக்கு எதிராக மதுரை மாவட்டம், வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேற்கண்ட குற்றவாளி கார்த்திக் @ சுண்டு கார்த்திக் தொடர் குற்றசெயல்களில் ஈடுபட்டதன் காரணமாக சரித்திர பதிவேடு ஆரம்பித்து கண்காணிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கை விசாரித்த மதுரை மாவட்டம், வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திரு. செல்லையா அவர்கள் மேற்படி திருட்டு வழக்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக மேற்கண்ட இரண்டு குற்றவாளிகளுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூபாய் 20,000/- அபராதமும் விதித்து, வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளார். அதன் பேரில் மேற்படி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து கண்காணித்து வழக்கின் சாட்சியங்கள் அனைவரையும் முறையாக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி இவ்வழக்கில் எதிரிகளுக்கு அதிக பட்ச தண்டனை பெற்றுத்தர சிறப்பாக வாதாடிய சிறப்பு அரசு வழக்கறிஞர் திரு. K.S.ராமசாமி, நீதிமன்றத்தில் துரிதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜா, நீதிமன்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. கஜேந்திரன் மற்றும் நீதிமன்ற பெண் தலைமை காவலர் திருமதி.விஜயா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டி உள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்
















