சிவகங்கை: தமிழகம் முழுவதும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக அக்னி நட்சத்திரத்தால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வாகன ஓட்டிகளின் நலன் கருதி முக்கிய சந்திப்பு மற்றும் சிக்னல் தளமான பெரியார் சிலை அருகே சாலையின் மூன்று மார்க்கத்திலும் பள்ளத்தூர் ஸ்ரீ விசாலம் சிட்பண்ட் மற்றும் சொர்ணலெட்சுமி சமூக சேவை அறக்கட்டள ஆகியோரின் உதவியோடு காரைக்குடி தாலுகா காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் நிழலில் நிற்கும் வகையில் தார்பாலின் மேற்கூரைகளை அமைத்துள்ளது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதன் திறப்புவிழா இன்று நடைபெற்றது.
காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ்,பள்ளத்தூர் ஸ்ரீ விசாலம் சிட்பண்ட் நிர்வாக இயக்குநர் உமாபதி அருணாச்சலம், சொர்ணலட்சுமி அறக்கட்டளை தலைவர் கணேஷ்பாண்டியன் ஆகியோர் திறந்து வைத்தனர். இது குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் கூறுகையில், சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் நலன் கருதி முதல் முயற்சியாக பெரியார் சிலை சந்திப்பு அருகே சாலையில் மேற்கூரை அமைத்துள்ளோம். படிப்படியாக பல்வேறு வியாபார நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் தேவைப்படும் இடங்களில் அமைக்கப்படும் என்றார். இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம், சமூக சேவகர்கள் வழக்கறிஞர் விமல், சீராள மதன், அறக்கட்டளை செயலாளர் மாதவன்,பொருளாளர் அரவிந்த் கிஷோர் உள்பட பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி