திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் இருந்து அரசுப் பேருந்து தேனிக்கு இயக்கப்படுகிறது. அவ்வாறு தேனிக்கு இயக்கப்பட்ட பேருந்து, கடந்த வியாழக்கிழமை பணிமனைக்கு வந்தது. பணிமுடிந்து பேருந்தைவிட்டு இறங்கிய ஓட்டுநர் சேரன்மகாதேவியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (56), நடத்துநர் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த உச்சிமாகாளி (27). பணிமனை காவலாளி முருகேசன் (35). ஆகியோர் பேருந்தை சோதனையிட்டபோது, கைப்பை ஒன்று இருந்தது. அதில் தங்க நகைகள் இருந்தன.
இதையடுத்து நகைப் பையை சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து காவல் ஆய்வாளர், தா்மராஜ், தேனி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். அப்போது, தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த சேவியர் மகன் பிரின்ஸ்டன் புரூனோ (28). தனது 10 பவுன் நகைகளைக் காணவில்லை என புகார் அளித்திருந்ததும், இந்த பேருந்தில் பயணம் செய்தபோது அவர் நகைகள் இருந்த கைப்பையைத் தவறவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து பிரின்ஸ்டன் புரூனோவை வரவழைத்த போலீசார் அவரது நகைகளை ஒப்படைத்தனர். மேலும், அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர், காவலாளி ஆகியோருக்கு காவல் ஆய்வாளா், தா்மராஜ் பரிசுகள் வழங்கினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்