திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, நடுத்தெருவைச் சேர்ந்த, பட்டமுத்து என்பவரின் மகன்கள் பாலாஜி மற்றும் இசக்கியப்பன். சகோதரர்கள் இருவருக்கும் இடையே கடை நிர்வாகம் தொடர்பாக நீண்டநாள் பிரச்சனை இருந்து வந்துள்ளது. பிரச்சனைக்கு தீர்வு காண பாலாஜி அளித்த புகாரின் அடிப்படையில் , காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகையில் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெற்றுக் கொள்வதாக தெரிவித்ததன் அடிப்படையில் விசாரணை முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த, (14.10.2025) அன்று இசக்கியப்பன் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் தன்னையும் தன்னுடைய மனைவியையும் பாலாஜி மற்றும் இருவர் சேர்ந்து தாக்கியதாக புகார் ஒன்று அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் பாலாஜி மற்றும் இரு நபர்கள் மீது , வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சட்டப்படி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கண்ட விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாலாஜி காவல்துறையினர் முறையாக விசாரிக்கவில்லை என்றும், பணம் கேட்டு மிரட்டுவதாகவும் தன்னுடைய குடும்பத்தினருடன் ஒரு தவறான காணொளியை உருவாக்கி வாட்ஸ்அப் செயலி மூலம் வெளியிட்டுள்ளார். இது முழுமையான ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டு ஆகும். தங்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவும், வழக்கை திசை திருப்பும் விதமாகவும் இது போன்ற செயல்களை செய்து வருகின்றனர். காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், பொய்யான தகவல்கள் வீடியோக்கள் அல்லது குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் பரப்புவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இத்தகைய தவறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிடுவோர் மீது உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
                                











			
		    


