தூத்துக்குடி : கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா இன்று (25.01.2026) வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. மேற்படி திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு குற்றப் பிரிவு காவல்துறையினரும் கூடுதலாக தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்படி நடைபெற்று வரும் கும்பாபிஷேக திருவிழாவில் கூட்ட நெரிசலில் பக்தர்கள் தவறவிட்ட மூன்று செல்போன்களை காவல்துறையினர் பத்திரமாக மீட்டு கோவில் காவல் கட்டுப்பாட்டு அறை ஒலிபெருக்கியின் மூலம் தகவல் தெரிவித்து அதன் உரிமையாளர்களை அடையாளம் கண்டு மேற்படி 3 செல்போன்களையும் காவல்துறையினர் பத்திரமாக ஒப்படைத்தனர். மேலும் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி செல்போன்களை பத்திரமாக மீட்டு அதன் உரிமையாளர்களை கண்டுபிடித்து ஒப்படைத்து துரிதமாக செயல்பட்ட காவல்துறையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.















