சென்னை : வியாசர்பாடி போக்குவரத்து, காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைக்காவலர் திரு.R.விமல்குமார், (த.கா.27613) கடந்த (23.04.2022), அன்று இரவு வியாசர்பாடி, கணேசபுரம் பாயிண்டில் பணியிலிருந்தபோது, அவ்வழியே சென்ற இளைஞர் ஒருவர் சாலையில் கேட்பாரற்று, கிடந்த கைப்பையை எடுத்து மேற்படி தலைமைக்காவலரிடம் ஒப்படைத்துள்ளார். தலைமைக்காவலர் திரு.விமல்குமார், கைப்பையை திறந்து பார்த்த போது, அதில் விலையுயர்ந்த ஆப்பிள் ஐ-போன், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் இரண்டு செக் புக்குகள் இருந்துள்ளது.
தலைமைக்காவலர் உடனே செக்புக்கிலிருந்த, கைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசி, கைப்பையை தவறவிட்ட பெண்ணின் கணவரை நேரில் வரவழைத்து, அவரிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளார். கைப்பையை பெற்றுக்கொண்ட பெண்ணின் கணவர் சென்னை, காவல் துறையினரை பாராட்டி, சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். சிறப்பாக பணிபுரிந்த தலைமைக்காவலரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் (07.05.2022) அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.