விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி, சிவகாமிபுரத்தைச் சேர்ந்தவர் பெரிய கருப்பன். இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை, சாத்துார், அருகே கத்தாளம்பட்டியில் உள்ளது. இங்கு, நேற்று காலை 8:15 மணிக்கு 12 தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். சுந்தரக்குடும்பன் பட்டியைச் சேர்ந்த, சோலை விக்னேஷ், (26), என்பவர் பட்டாசுக்கு மருந்து செலுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது உராய்வு காரணமாக, வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்ததில் அறை தரைமட்டமானது. அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மற்ற தொழிலாளர்கள், அங்கிருந்து தப்பியோடி உயிர் தப்பினர். தகவலின்படி, சாத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் கதிரேசன் தலைமையில் வீரர்கள் தீயை அணைத்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது குறித்து, அம்மாபட்டி காவல் துறையினர், விசாரனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பட்டாசு ஆலை வெடி விபத்தில், இறந்த விக்னேஷ் குடும்பத்துக்கு, 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க, முதல்வர் திரு. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.