சென்னை : காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சூசை ராஜா, (52), கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த சஜன், (50) இவர்கள், வேலைக்காக, ஐக்கிய அமீரக அரபு நாடுகளில், உள்ள சார்ஜாவிற்கு, சில ஆண்டுகளுக்கு முன்சென்றனர். இந்நிலையில், இருவரும் சார்ஜாவிலிருந்து, ‘ஏர் அரேபியன்’ விமானம், வாயிலாக சென்னை வந்தனர். அப்போது அவர்களது பாஸ்போர்ட்களை, குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன், நாட்டிற்கு சென்று வந்தது தெரிந்தது.
இருவரையும் வெளியில் விடாமல், குடியுரிமை அதிகாரிகள், நிறுத்தி வைத்து, நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, ‘கட்டட வேலைக்காக, சார்ஜா சென்றோம். அங்கு சரியான வேலை கிடைக்காததால், ஏமன் நாட்டிற்கு சென்றோம். ஏமன் செல்ல தடை இருப்பது எங்களுக்கு தெரியாது, ‘ என அவர்கள் கூறினர். இதையடுத்து, சஜன் மற்றும் சூசை ராஜா, இருவரையும் கைது செய்து, மேல் விசாரணைக்காக சென்னை விமான நிலைய காவல் துறையிடம், ஒப்படைத்தனர். காவல் துறையினர், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.