மதுரை : மதுரை மாவட்டம், கள்ளிக்குடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சிவரக்கோட்டை கிராமம் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை போதைப்பொருட்களை விற்பனைக்காக சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கள்ளிக்குடி காவல் நிலைய ஆய்வாளர் திரு. சோமசுந்தர் அவர்களின் மேற்பார்வையில், கள்ளிக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முத்துராஜா அவர்கள் தலைமையில் HC 831 திரு.செல்லப்பாண்டி, HC 750 திரு.குமார், HC 1687 திரு.ராகவன், HC 1708 திரு.கருப்பையா ஆகியோர்களுடன் நேற்று (08.01.2026)-ம் தேதி இரவு 07.00 மணியளவில் T.அரசபட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் திருமால் என்பவரது வாடகை வீட்டில் நடத்திய சோதனையில் அரசால் தடைசெய்யப்பட்ட கணேஷ் புகையிலை 4005 பாக்கெட்டுகள் (சுமார் 60 கிலோ) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், குற்றவாளி திருமால் என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில், அவருடன் இணைந்து சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட மற்றொரு குற்றவாளி யான வளையங்குளம் கிராமத்தைச்சேர்ந்த பழனியாண்டி மகன் சதிஷ் குமார் என்பவரும் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கள்ளிக்குடி காவல் நிலையத்தில் மேற்படி குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரி மற்றும் ஆளிநர்களுக்கு உயரதிகாரிகள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தார்கள்.
இனி வரும் காலங்களில் இது போன்று சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்து உள்ளார்கள். இது போன்று கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க 91760-79100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அதன் பேரில் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு, தகவல் தெரிவிப்போரின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்
















