தூத்துக்குடி: வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.அருள் தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.வேல்ராஜ், திரு.சிவராஜ் ஆகியோர் அடங்கிய போலீஸ் படையினர் கருத்தபாலம் அருகே இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை மூட்டை மூட்டையாக கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சரக்கு ஆட்டோவில் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த குளத்தூர் பெரியார் நகரை சேர்ந்த மாரியப்பன் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் தூத்துக்குடியை அடுத்த வட்டகோவிலில் மற்றொரு சரக்கு வாகனத்தில் இருந்துதான் மாநகராட்சிக்குள் இருக்கும் கடைகளுக்கு புகையிலைப் பொருட்களை சப்ளை செய்ய வந்ததாக தகவல் கூறினார்
. இதையடுத்து மாரியப்பன் கொடுத்த தகவலின் அடிப்படையில் வட்ட கோவிலுக்கு புகையிலை பொருட்களை ஏற்றி வந்த மற்றொரு சரக்கு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக புகையிலைப் பொருள்கள் கடத்துவதற்கு பயன்படுத்திய 2 ஆட்டோக்கள் உள்பட 1.700டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு மொத்தம் 13 லட்சத்து 91 ஆயிரத்து 935 ரூபாய் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.