திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெரியக்காவனம் ரயில்வேகேட் அருகே ரவி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை வழக்கம் போல டீக்கடையை திறந்து கேஸ் சிலிண்டரை மாற்றிய போது வால்வு பகுதியில் கசிவு ஏற்பட்டு குடிசை பற்றி எரிந்தது. இதனால் ரவி அலறி அடித்துக் கொண்டு கடையிலிருந்து வெளியே வந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ அருகில் பரவாமல் கட்டுப்படுத்தினர். எனினும் இந்த தீ விபத்தில் குடிசை மற்றும் டீக்கடையில் இருந்த சிலிண்டர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது. மேலும் டீக்கடை உரிமையாளர் ரவிக்கு காலில் லேசான தீக்காயம் ஏற்பட்டது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில்வே கேட் அருகே டீக்கடை பற்றி எரிந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு