மதுரை : இந்து மதத்தையும், பிரதமர் மோடி,அமித் ஷா மற்றும் தமிழக அரசை அவதூறாக பேசியதாக கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து அவர் காரில் தப்பிச் சென்றார். அவர் சென்னைக்கு தப்பிச் செல்வதாக தகவலறிந்த கன்னியாகுமரி போலீசார் அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக சிலைமான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.சிலைமான் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ப்போது சென்னைக்கு சென்ற கார் ஒன்றை போலீசார் சோதனையிட்டனர். அதில் ஜார்ஜ் பொன்னையா இருந்தது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து கள்ளிக்குடி காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்த சிலைமான் போலீசார் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியனிடம் இன்று காலை ஒப்படைத்தனர். கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியன் ஜார்ஜ் பொன்னையாவை தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றார்.