திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன், இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து மாணவ, மாணவியர்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் பாளையங்கோட்டையில் உள்ள சாரதா மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜு, அவர்கள் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர்கள் திரு. ராஜரத்தினம் அவர்கள் மற்றும் திரு. மோகன் அவர்கள் ஆகியோர் கூறுகையில், பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், காவல் உதவி செயலியின் முக்கியத்துவம் குறித்தும், வங்கிக் கணக்குகளின் இரகசிய எண்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்தி மற்றும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும், ஆன்லைன் வர்த்தக தளத்தில் பொருட்களை வாங்கும் போது கவனமுடன் பொருட்களை வாங்க வேண்டும் என்றும், பரிசுப் பொருள்கள் விழுந்துள்ளதாக வரும் எந்த ஒரு அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள், லிங்க்குகளுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என்றும், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றும் போலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், குறைந்த விலையில் தரம் உயர்ந்த எலக்ட்ரிக் பொருட்களை தருவதாக கூறும் நபர்களை பற்றியும் பொருளின் தரத்தை பற்றியும் நன்கு அறிந்து செயல்பட வேண்டும் என்றும், பண மோசடி சம்பந்தமான குற்றங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 மோசடி புகார்களுக்கு புகார் செய்ய வேண்டிய இணையதள முகவரி http://cybercrime.gov.in
வழங்கியும், பெருகி வரும் சைபர்கிரைம் குற்றங்களிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும், சமூக வலைதளங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.