தூத்துக்குடி: கடந்த (15.10.2025) அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவன்நகர் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் 15சவரன் தங்க தாலி செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற வழக்கில் சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதே போன்று கடந்த (27.11.2025) அன்று தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரகமதுல்லாபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் 3½ சவரன் தாலி செயினை மர்மநபர்கள் பறித்து சென்ற வழக்கில் மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாஸ்கரன் மற்றும் போலீசார் (03.12.2025) பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜெயராஜ்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மேற்படி போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சிக்கும் போது காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் தூத்துக்குடி பண்டாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்களான விஜயகுமார் மகன் பரத் (22). மற்றும் ஐயப்பன் மகன் அஜித்குமார் (29). ஆகியோர் என்பதும் அவர்கள் மேற்படி சிப்காட் மற்றும் மத்தியபாகம் காவல் நிலைய செயின் பறிப்பு வழக்கில் ஈடுபட்டவர்கள் என்பதும் மேற்படி 2 இடங்களில் பறித்த தங்கத்தை அங்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரும்போது போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனைடுத்து உடனடியாக மேற்படி போலீசார் எதிரிகளான பரத் மற்றும் அஜித்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மேற்படி வழக்குகளில் சம்பந்தப்பட்ட மொத்தம் 18½பவுன் தங்கத்தை மீட்டு ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















