தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மகிழ்ச்சிபுரம் பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவரது மனைவி கவிதா (42), என்பவர் நேற்று இரவு தனது வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டூவிபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் மேற்படி கவிதா கழுத்தில் அணிந்திருந்த சுமார் 9 பவுன் தங்க தாலிச் செயினை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து கவிதா மத்தியபாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அய்யப்பன் தலைமையில் வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் திரு. மாணிக்கராஜ், திரு. மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. சாமுவேல், தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் திரு. செந்தில்குமார், திரு. திருமணிராஜன் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் திரு. முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளியை விரைந்து கைது செய்து தங்க நகையை மீட்குமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலமாக தீவிர விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் கண்ணன் 23. என்பவர் மேற்படி கவிதாவின் தங்க தாலிச் செயினை பறித்து சென்றது தெரியவந்தது. உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரி கண்ணனை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 3,50,000/- மதிப்புள்ள சுமார் 9 பவுன் தங்க தாலிச் செயின் மற்றும் செயின் பறிப்பிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளியை 7 மணி நேரத்தில் கைது செய்த மேற்படி தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் பாராட்டினார்.