அரியலூர் : தமிழக அரசு உத்தரவின்படி இந்த 2025 ஆண்டு முதல் செப்டம்பர்-06 நாள் தமிழ்நாடு காவலர் தினமாக அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி (06.09.2025) காலை அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாடப்பட்டது. முன்னதாக காவலர் தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை வளாகத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினார்கள். அவரைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள், காவல் ஆளிநர்கள், மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் என 50க்கும் மேற்பட்டோர்கள் இரத்ததானம் வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், காவல் துறையில் பணிபுரிந்து உயிரிழந்தவர்களின் நினைவாக உள்ள நீத்தார் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.முத்தமிழ் செல்வன் அவர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் திரு.ரகுபதி மற்றும் திரு.ரவிச்சந்திரன் மற்றும் காவல் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள். இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் அனைவரும் காவலர் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறை பணிகளில் உள்ள இடர்பாடுகள் மற்றும் பொதுமக்கள் காவல்துறையை அணுகுவது பற்றியும் சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில்,செந்துறை காவல் நிலையத்தில் பணிபுரிந்து,உடல்நல குறைவால் உயிரிழந்த முதல் நிலைக் காவலர் தெய்வதிரு.செல்வம் அவர்களது குடும்பத்திற்கு அரியலூர் மாவட்ட காவல்துறையினரின் பங்களிப்பு நிதியான ரூ.5 லட்சத்திற்கான காசோலையை காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,மறைந்த காவலரின் மனைவி மற்றும் மகன்களிடம் வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற காவல்துறை தொடர்பான விழிப்புணர்வு ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார்கள். அரியலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் நிலைய எழுத்தர், நடப்புதாள் எழுத்தர், நீதிமன்ற பணி மற்றும் CCTNS ஆகியவற்றில் சிறப்பாக பணிபுரிந்தவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் முறையான காவல் துறை அமைப்பு எப்போது தோன்றியது அதன் பரிணாமம், நவீனமயம், அதன் செயல்பாடுகள் குறித்து காணொளி திரையிடப்பட்டது .
அரியலூர் மாவட்ட காவல்துறை மோப்பநாய் படைப்பிரிவில் உள்ள மோப்ப நாய்கள் காவல்துறையில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் மற்றும் பாதுகாப்பு இவற்றில் எவ்வாறு பங்காற்றுகின்றன என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் அரியலூர் மாவட்ட தீயணைப்பு துறையினர் அவசர காலங்களில் தீயை எவ்வாறு அணைப்பது மற்றும் தீயிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிகழ்ச்சி மேடையின் அருகே காவல்துறையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் மாணவர்கள் வரைந்த காவல்துறை விழிப்புணர்வு ஓவியங்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டன, இதை பெரும்பாலானோர் கண்டு ரசித்தனர்.