சென்னை : சென்னையில் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஏமாற்றுதல், சமூக ஊடகங்களில் பண மோசடி, மொபைல் போன்களில் பண மோசடி, ஓ.டி.பி எண் பெற்று ஏமாற்றுதல், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மோசடி, இணையவழி ஏமாற்றுதல், இணையவழி மூலம் தனி நபர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துதல், இணையவழியில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தல் போன்ற குற்ற செயல்கள் நாளுக்கு நாள் பெருகி வந்த நிலையில் அதனை தடுப்பதற்காக கடந்த 2003ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு – சைபர் கிரைம் போலீசார் பிரிவு தொடங்கப்பட்டது.
சென்னை காவல் ஆணையரகத்தில் இயங்கி வந்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான புகார்கள் வரத்தொடங்கின. இதனை கருத்தில் கொண்டு புகார்தாரர்களுக்கு நேரவிரயத்தை தடுப்பதற்காக, சைபர் கிரைம் போலீசாருக்கு விசாரணை மேற்கொள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கலைத் தீர்த்து வைப்பதற்காகவும் கடந்த ஆகஸ்டு மாதம் 12 காவல் மாவட்டத்திலுள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவு துவங்கப்பட்டது.
இதனால் மக்கள் எளிமையாக சைபர் கிரைம் சார்ந்த புகார்களை நேரடியாகவும் ஆன்லைன் மூலமும் அளித்து வந்தனர். 12 காவல் மாவட்டங்களிலும் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகளில் இதுநாள்வரை மொத்தம் 602 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது வடக்கு மண்டலத்தில் 57 வழக்குகளும், தெற்கு மண்டலத்தில் 292 வழக்குகளும், கிழக்கு மண்டலத்தில் 115 வழக்குகளும், மேற்கு மண்டலத்தில் 138 வழக்குகள் என 602 புகார்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
22,81,682 ரூபாய் பறிமுதல்
இவற்றில் 57 வழக்குகள் உடனுக்குடன் முடித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் 250 வழக்குகள் முடியும் தருவாயில் உள்ளன.அதுமட்டுமல்லாமல் ரூபாய் 22 லட்சத்து 81,682 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குமரன் நகரில் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணை துன்புறுத்திய வழக்கில் 18 வயதுக்கு உட்பட்ட ஒரு நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அதேபோல துரைப்பாக்கம் பகுதியில் டாட்டா கேப்பிட்டல் ஃபெதெர் லைட் டெக் என்ற நிறுவனம் லோன் வாங்கி தருவதாக ரூபாய் 2 லட்சம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் போலி கால் சென்டர் நடத்திய நபர்களை சைபர் கிரைம் போலீசார் உடனுக்குடன் கைது செய்தனர்.
பெண்கள் புகார் அளிக்க தயக்கம் வேண்டாம் !
பெண்களுக்கு தெரியாமலேயே அவர்களை படம் எடுத்தால், அந்த குற்றவாளிகள் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. பெண்கள் தாங்கள் தங்கியிருக்கும் அறைகளில் சட்டவிரோதமாக ரகசிய கேமரா பொருத்தியிருக்கிறதா என்பதை கண்டறிய ஆன்ட்ராய்டு மொபைல் போனில் ஆப் ஒன்றை டவுன்லோடு செய்து கொள்ளலாம். (hidden camera detector) என்ற ஆப் மூலம், அந்த அறைகளில் கேமரா இருக்கிறதா என்பதை சுலபமாக கண்டுபிடித்து விட முடியும்.
பொதுவாக மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் விடுதிகளை தேர்வு செய்ய வேண்டும். கேமரா எதுவும் இல்லையா என்று தெரிந்து நம்பிக்கையான விடுதி தானா என்று தேர்வு செய்ய வேண்டும். இருந்தாலும், ஆப் மூலம் இதுபோன்ற கேமராக்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். பெண்கள் தங்களுக்கு தெரியாமல் ரகசியமாக இது போன்று கேமரா வைத்து படம் பிடிப்பவர்கள் தொடர்பாக புகார் தர பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பெண்கள் தைரியமாக சைபர் குற்றம் சம்பந்தமாக புகார் இருந்தால் எங்களது சைபர் கிரைம் பிரிவில் தெரிவிக்கலாம்.
நாங்கள் புகார் கொடுக்கும் பெண்களின் பெயர் வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்து விசாரணை நடத்துகிறோம். அவர்களது எதிர்காலம் பாதிக்காதவாறும், எந்த தகவலும் வெளியில் போகாமல் ரகசியமாக விசாரணை நடத்தப்படும். எனவே, பாதிக்கப்பட்ட பெண்கள் தயங்கி நிற்காமல் புகார் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.பெண் ஒருவரின் அனுமதி இல்லாமல் என்ன மாதிரியான படம் எடுக்கப்படுகிறது, எங்கிருந்து படம் எடுக்கின்றனர்; அந்த படத்தை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனை பெற்று தரப்படும். பெண் ஒருவரை சட்ட விரோத மாக படம் பிடிப்பதால் ஐடி விதிகளின் படியும், ஐபிசி விதிகளின் படியும், பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். பெண்களின் பாதுகாப்புக்காக இதுபோன்ற சட்டங்களை சேர்த்து கடும் நடவடிக்கை எடுப்பதால் தான் வருங்காலத்தில் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும்.
தனித்தனியாக ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் சைபர் கிரைம் பிரிவு தொடங்கப்பட்டதால், தேவையற்ற நேர விரயத்தை குறைப்பதாகவும், மேலும் சைபர் கிரைம் போலீசார் தங்களுடன் நட்பு ரீதியில் பழகி உடனுக்குடன் குற்றங்களை தீர்த்து வைப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்