திருவள்ளூர் : திருவள்ளூர் சோழவரம் அடுத்த ஞாயிறு ஊராட்சிக்குட்பட்ட கண்ணியம்பாளையம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கான்கிரீட் தூண்கள் அமைத்து ஒருபுறத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ள நிலையில் சாலையோரம் அமைந்துள்ள பகுதியில் கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளியின் தலைமை ஆசிரியரான மெய்யழகன் என்பவர் பள்ளியின் சுற்றுச்சுவர் அமைப்பதற்காக போடப்பட்ட கான்கிரீட் தூண்களை இடித்து சேதப்படுத்தியுள்ளார்.
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மெய்யழகனின் விவசாய நிலத்திற்காக அரசுப் பள்ளியை ஒட்டி குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீர் கொண்டு செல்வதாகவும், கான்கிரீட் தூண்கள் அமைத்து சுற்றுச்சுவர் கட்டப்படுவதால் தனது நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வது பாதிக்கப்படும் என்பதால் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சோழவரம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு