திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் மூதாட்டி சரஸ்வதி (85). மனநலம் குன்றிய நிலையில் உள்ள மூதாட்டியை அவரது மகள் பிரேமா குடும்பத்தினர் கவனித்து வந்துள்ளனர். சரஸ்வதியின் பேரன் பத்மநாபன் (23) மீஞ்சூர் காவல் நிலைய பி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வருகிறார். அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொண்டக்கரை மனோகரன் கடந்த 2022ஆம் ஆண்டு லாரி ஏற்றி கொடூரமாக வெட்டி கொலை செய்த வழக்கு உட்பட பல்வேறு வழக்கு பத்மநாபன் மீது நிலுவையில் உள்ளது. கஞ்சா கடத்தல் வழங்கி கைதான பத்மநாபன் அண்மையில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மூதாட்டி சரஸ்வதி மனநலம் குன்றிய நிலையில் அவ்வபோது யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்று விடுவதால் அவரை வீட்டின் வெளியே அமைந்துள்ள அறையில் உள்ள கட்டிலில் சங்கிலியால் கட்டிப்போட்டு வைத்து கவனித்து வந்துள்ளனர்.
காலையில் மூதாட்டி திடீரென வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் அவரது பேரன் பத்மநாபன் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து மூதாட்டிக்கு சப்பாத்தி கொடுத்தபோது சரஸ்வதி சாப்பிடாததால் ஆத்திரமடைந்த பத்மநாபன் அங்கிருந்த சுத்தியலால் மூதாட்டியின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாட்டியை சுத்தியலால் அடித்து கொலை செய்த பேரன் பத்மநாபன் மீஞ்சூர் காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு