திருநெல்வேலி : திருநெல்வேலி மதுரை மாவட்டம், திருப்பாலை, பகுதியை சேர்ந்த சத்யவாணி பொன்ராணி(55), என்பவருக்கு வெள்ளாளங்குளம் பகுதியில் 1½ ஏக்கர் நிலம் உள்ளது. சத்யவாணி பொன்ராணி அவர்களின் கணவர் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக ஓய்வு பெற்றவர் ஆவார். மேற்படி நிலத்தை 1990-ம் ஆண்டு சத்யவாணி அவர்கள் வாங்கிய பின்னர் தற்போது நிலத்திற்கு வில்லங்க சான்றிதழ் எடுத்து பார்த்துள்ளார். அப்போது மேற்படி நிலம் போலி ஆவணம் தயார் செய்து வேறோருவர் பெயரில் மாற்றப்பட்டது தெரியவந்தது. இதேபோல் இராதாபுரம், பெரியகுளத்தை சேர்ந்த முத்துக்குமார் (27) என்பவருக்கு தந்தை மற்றும் தாய் உயிருடன் இல்லை. முத்துக்குமாருக்கு தெரிந்தவர்கள் உங்களுக்கு பழவூர் அருகே கருங்குளம் பகுதியில் 28 செண்ட் நிலம் உள்ளது என்று கூறியதன் பேரில் முத்துக்குமார் அங்கு சென்று இடத்தை பார்த்துள்ளார். அப்போது மேற்படி நிலத்திற்கு வில்லங்க சான்றிதழ் எடுத்து பார்த்தபோது, நிலத்திற்கு போலி ஆவணம் தயார் செய்து வேறோருவர் பெயரில் மாற்றப்பட்டது தெரியவந்தது.
மேலும் நாங்குநேரி, அம்பலம் பகுதியை சேர்ந்த திரு.டேவிட் என்பவருக்கு சொந்தமாக அரியகுளம் பகுதியில் 1 ஏக்கர் 60 செண்ட் நிலம் உள்ளது. மேற்படி நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து வேறொருவருக்கு இடம் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக டேவிட் அவர்களுக்கு தெரியவந்தது. மேற்படி நிலத்தினை மீட்டுத்தருமாறு சத்யாவானி பொன்ராணி, முத்துக்குமார் மற்றும் டேவிட் ஆகியோர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயபால் பர்னபாஸ் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி. மீராள்பானு அவர்கள், உதவி ஆய்வாளர் திருமதி. தனலெட்சுமி அவர்கள், தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நில உரிமையாளர்கள் சத்யவாணி பொன்ராணி மற்றும் முத்துக்குமாரிடம் (21.03.2023),மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
மேற்படி டேவிட் மனு மீது விசாரணை மேற்கொண்டதில் மேற்படி நிலமானது போலி ஆவணம் மூலம் வேறு நபருக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து மாவட்ட வருவாய் துறையினர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர் இணைந்து நடத்திவரும் நில அபகரிப்பு தொடர்பான முகாமில் மேற்படி நில உரிமையாளர் டேவிட் மற்றும் எதிர் மனுதாரர் முகாமிற்கு அழைக்கப்பட்டு, மேற்படி மனு விசாரணைக்கு துணை ஆட்சியர் திருமதி. தமிழரசி அவர்கள், வட்டாட்சியர் திரு.பகவதி பெருமாள், அவர்கள் மற்றும் துணை வட்டாட்சியர்கள் ஆகியோர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நியமித்து, மேற்படி துணை ஆட்சியர் அவர்களின் சீரிய முயற்சியால் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மேற்படி ஆவணம் போலி ஆவணம் என உறுதி செய்யப்பட்டது. மேலும் பதிவாளர் அவர்கள் பிறப்பித்த மோசடி பதிவு என வழங்கிய செயல்முறை ஆணையை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன், இ.கா.ப அவர்கள் நிலத்தின் உரிமையாளரான டேவிட் அவர்களிடம் இன்று வழங்கினார். மேற்படி மனுக்களில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 3⅓ கோடி மதிப்புள்ள 3 ஏக்கர் 38 செண்ட் நிலத்தினை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.