விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று இரவு கனமழை பெய்தது. காலையில் இருந்து மேகமூட்டமாக இருந்த நிலையில் கடுமையான வெட்கை இருந்தது. இந்த நிலையில் இரவு 9 மணியளவில் சாரலாக துவங்கிய மழை சற்று நேரத்தில் பலத்த மழையாக பெய்யத்துவங்கியது. பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்ததால், சிவகாசி நகர் பகுதியில் உள்ள சாலைகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் பல இடங்களில் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மழைநீரில் சாய்ந்து விழுந்து இழுத்துச் செல்லப்பட்டது.
மாரியம்மன் கோவில் பகுதி, புதுரோட்டு தெரு, ஜவுளிக்கடை வீதி, மணி நகர், பழைய நீதிமன்ற சாலை, தெற்கு தெரு, காளியம்மன் கோவில் தெரு, புதுத்தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். இரவு நீண்ட நேரம் சாரல்மழை பெய்து கொண்டே இருந்தது.
சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளான சித்துராஜபுரம், சசிநகர், பேர்நாயக்கன்பட்டி, மாரனேரி, விளாம்பட்டி, மாதாங்கோவில்பட்டி, பாறைப்பட்டி, மீனம்பட்டி, சுந்தர்ராஜபுரம், அனுப்பங்குளம், பேராபட்டி, அம்மன் நகர், திருத்தங்கல், செங்கமலப்பட்டி, செங்கமலநாச்சியார்புரம் உள்ளிட்ட பல இடங்களிலும் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் இந்தப்பகுதியில் உள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. சிவகாசி பகுதியில் பெய்த கனமழை பொதுமக்களுக்கு சற்று சிரமத்தை தந்தாலும், குடிநீர் பிரச்சினை தீரும் என்று மகிழ்ச்சியையும் தந்துள்ளது. மதுரை மாவட்டத்தில், வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி