மதுரை : மதுரையை அடுத்த பசுமலையை சேர்ந்த (16), வயது சிறுமி ஒருவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் படிப்பை விட செல்போனில் பிரீ பயர் என்னும் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தார். இந்த நிலையில் மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டம் புதிய ரயில்வே காலனியை சேர்ந்த செல்வா (21), என்பவருடன் சிறுமிக்கு பிரீபயர் விளையாட்டு மூலம் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் பிரீ பயர் ஆன்லைன் விளையாட்டை சேர்ந்து விளையாடி வந்துள்ளனர். இதுதொடர்பாக 2 பேரும் வாட்ஸ்-அப் மற்றும் செல்போனில் பேசி வந்துள்ளனர். நாளடைவில் சிறுமிக்கும், செல்வாவுக்கும் காதல் மலர்ந்தது. இந்தநிலையில் செல்வா அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாகவும், வீட்டை விட்டு வெளியேறி தன்னுடன் வந்து விடுமாறும் கூறியுள்ளார். செல்வாவின் ஆசைவார்த்தைக்கு மயங்கிய சிறுமி, வீட்டை விட்டு வந்து விடுவதாக தெரிவித்துள்ளார்.
தையடுத்து மதுரைக்கு வந்த செல்வா, சிறுமியை சந்தித்து மராட்டிய மாநிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் வீட்டில் மகளை காணாததால் பல இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. அதனால் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில், புகார் செய்தனர். அதன் பேரில் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். மேலும் சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை ஆய்வு செய்தனர். இதில் மராட்டிய மாநிலம் ராய்கட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர், அங்கு விரைந்தனர். சிறுமியை தேடி காவல் துறையினர், வருவதை அறிந்த செல்வா புனே ரெயில் நிலையத்தில், அந்த சிறுமியை விட்டு விட்டு தப்பிச்சென்றார்.
காவல் துறையினர், அந்த சிறுமியை மீட்டு திருப்பரங்குன்றத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். வாலிபர் கைது மேலும் மராட்டிய மாநிலம் ராய்கட் பகுதியில், பதுங்கி இருந்த செல்வாைவ, திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் திருமதி. சுந்தரி, தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை காவல் துறையினர், கைது செய்தனர். செல்வாவின் தந்தைக்கு கடலூர் மாவட்டம் டி.புடையூர் சொந்த ஊராகும். இதனால் செல்வா தமிழ் பேசுவார். இதை வைத்து பிரீபயர் விளையாட்டு மூலம் சிறுமியிடம் பழக்கம் ஏற்படுத்தி கொண்டு, மராட்டிய மாநிலத்திற்கு கடத்தி சென்றது தெரியவந்தது. கைதான செல்வாவிடம் காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி