மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே திருமங்கலம் விலக்கு பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் எனும் எழுச்சி பயண பரப்புரை நடைபெற்றது. இந்த பரப்புரைக்காக மதுரை, தேனி நான்கு வழிச்சாலையில் ஒரு பகுதியில் மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு ஒரு வழிப்பாதையாக வாகனங்கள் சென்றன. இந்நிலையில், உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வரும் கீழப்புதூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டி வந்து கொண்டிருந்த போது, பரப்புரை நடைபெற்ற இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு எதிரே வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்
குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்த லாரி அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மீதும் மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த விரிவுரையாளர் ராமச்சந்திரன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்,
அடுத்தடுத்த வாகனத்தில் இருந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய காவல் ஆய்வாளர் வனிதா உள்பட சிலர் சிறு காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகாகாவல் நிலைய போலீசார் ,விபத்தில் உயிரிழந்த விரிவுரையாளர் ராமச்சந்திரன் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல், கூட்டத்திற்குள் இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் கூட்டத்தில் நின்றிருந்த வண்டாரியைச் சேர்ந்த சங்கரம்மாள் மற்றும் ஆதிமூர்த்தி படுகாயமடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி