மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே, அரசு பள்ளிக்கு செல்ல முறையான சாலை வசதி அமைத்து தர கோரி 200 க்கும் அதிகமான கிராம மக்கள் பள்ளி மாணவ மாணவிகளுடன் சாலையில் தடுப்புகள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, வி.பெருமாள்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியில், 200 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை என்றும், தனிநபர்களின் பட்டா இடத்தின் வழியாக மாணவ மாணவிகள் சென்று வரும் சூழலில், மாணவ மாணவிகள் சென்று வர சாலை வசதி ஏற்படுத்தி தர தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இன்று 200 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து மாணவ மாணவிகளுடன் சாலையில் தடுப்புகள் அமைத்து தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து, விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தனிநபர்களின் ஒத்துழைப்போடு விரைவில் முறையான சாலை வசதி அமைத்து தரப்படும் என, உறுதியளித்தை அடுத்து கிராம மக்களின் போராட்டம் கைவிடப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி