திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பட்டமந்திரி பகுதியில் இருந்து மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் வரையிலான, திருவொற்றியூர் -பொன்னேரி இடையே செல்லும் நெடுஞ்சாலை ஆனது குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி வாசிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை கோரிக்கை மனுக்கள் பலமுறை அளித்தும் பலன் அளிக்காததால் சாலையை சீரமைக்க கோரி அவ்வப்போது போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் சேதமடைந்த சாலையை கடந்த ஆண்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு மாத காலத்திற்குள் சாலை சீரமைக்கப்படும் என உறுதி அளித்து 8 மாதங்களுக்கு மேலாகியும் சாலை சீரழிக்கப்படாததால் வடசென்னை பகுதியில் உள்ள துறைமுகங்கள், சிபிசிஎல் எண்ணெய் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லும் கனரக வாகனங்கள் அந்த சாலையை கடந்து செல்லும் பொழுது அதிலிருந்து புழுதி வெளியேறி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்து வருவதோடு, விபத்துகளும் அதிகரித்து வருவதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சேதமடைந்த சாலையை சீர் அமைக்க கோரி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து வாகனத்தில் ஏற்றிய போது மூதாட்டி ஒருவர் வாகனத்தில் ஏற மறுத்து காவலர்களின் பிடியிலிருந்து திமிரி தப்பி ஓட்டம் பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட அனைவரையும் காவல்துறையினர் அங்குள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அடைத்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு