கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சேடப்பாளையம் அருகே உள்ள எஸ்.புதூர் கிராமத்தில் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்ததை கண்டறிந்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற அவர், சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். மின்சாரத் துறை அதிகாரிகளிடம் உரிய தகவல் தெரிவித்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலையீட்டால் வாகன போக்குவரத்து உடனடியாக சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து பாதிப்பு நீக்கப்பட்டது. பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இந்த நடவடிக்கையால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
















