திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சமீப காலமாக சமூக ஊடகங்கள் வாயிலாக சில இளைஞர்கள் தங்களது சமுதாயத்தை உயர்த்தியும் பிற சமுதாயங்களை தாழ்த்தியும் வாசகங்களை பகிர்ந்து வருகின்றனர். இது சமூகத்தில் ஜாதிய உணர்வுகளை தூண்டும் அபாயத்தை உருவாக்கி, பொதுமக்களிடையே தவறான புரிதல்கள் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இதனால் சமூக அமைதிக்கு இடையூறாக அமையக்கூடிய பதிவுகளை உருவாக்கும் மற்றும் பகிரும் நபர்களை அடையாளம் காணும் பணியில் மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தடை செய்யப்பட்ட அபாயகரமான ஆயுதங்களை காட்சிப்படுத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட பதிவுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்தகைய நபர்கள் மீது பாரபட்சமில்லாமல் தீவிர நடவடிக்கை மேற்கொண்டதில், நிகழாண்டில் இதுவரை 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப அறிவுறுத்தல்படி பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, சமூக ஒற்றுமை மற்றும் பொது அமைதியை நிலைநிறுத்தும் நோக்கில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கண்காணிப்பு மற்றும் உரிய சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்