தூத்துக்குடி : குலசேகரன்பட்டினத்தில் இவ்வாண்டு அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த (23.09.2025) அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி (02.10.2025) அன்று சூரசம்காரம் மற்றும் (3.10.2025) அன்று காப்பு தரித்தல் நிகழ்வுடன் நிறைவு பெறுகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய நாட்களான (02.10.2025) மற்றும் (03.10.2025) ஆகிய 2 நாட்கள் திருவிழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து (01.10.2025) குலசேகரன்பட்டினம் அன்னம் மஹாலில் வைத்து திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் (பொறுப்பு) திரு. சந்தோஷ் ஹடிமணி இ.கா.ப. அவர்கள் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தசரா திருவிழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுரைகள் மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. மேற்படி தசரா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட தென்காசி மாவட்டம், விருதுநகர் மாவட்டம் மற்றும் மதுரை மாநகரத்தைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள்/காவல் துணை ஆணையர் தலைமையில் 10 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 46 காவல் உதவி/ துணை கண்காணிப்பாளர்கள், 117 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.