திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., சமூக வலைதள செயலியான வாட்ஸ்ஆப் மூலம் பண மோசடி நடைபெறுவது பற்றி இணைய பயனர்கள் கவனமுடன் இருக்குமாறு செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில். தற்போது ஆர்.டி.ஓ செலான் ஆப் என்ற பெயரில் வாட்ஸ்ஆப் மூலமாக மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபடுகின்றனர். இதில் அறிமுகம் இல்லாத எண்ணிலிருந்தோ அல்லது வாட்ஸ்ஆப் குழுக்களில் உள்ள நபர்களின் எண்களின் மூலமாகவோ பயனரின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு, ஆர்.டி.ஓ செலான் ஆப் என்ற செயலியை உடனடியாக பதிவிறக்கம் செய்து உங்கள் வாகனத்திற்கான அபராதத் தொகையை உடனே செலுத்த வேண்டும் என கூறி கோப்பு ஒன்று அனுப்பி வைக்கப்படும். அபராதத் தொகையை செலுத்தவில்லையெனில் ஓட்டுநர் உரிமம் முடக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருப்பதை உண்மையென நம்பி அந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் உங்கள் வாட்ஸ்ஆப்பை ஹேக் செய்து அதில் உள்ள தகவல்கள் மூலமாக உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து மர்ம நபர்கள் மோசடி செய்வர்.
மேலும் அந்த செயலி குறித்த குறுஞ்செய்தி உங்கள் எண் மூலமாகவே உங்களுடன் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்பப்பட்டு அவா்களிடமும் பண மோசடியில் ஈடுபடுவர். எனவே இது போன்று வாட்ஸ்ஆப்பில் வரும் பதிவுகள் மற்றும் வங்கிகளின் சலுகைகள், அரசாங்க நலத்திட்ட மானியம் எனக் கூறி வரும் செயலி கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இது போன்ற சைபர் கிரைம் நடைபெற்றால் www.cybercrime. gov.com என்ற இணைய முகவரி அல்லது 1930 என்ற எண்ணில் அழைத்து உடனடியாக புகாரை பதிவு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்