மதுரை : கடந்த (15.12.2023) ம் தேதி மதுரை மாவட்ட சரக காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அவரின் குடும்பத்தில் உள்ள பெண்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி ஆபாசமாகவும் அருவறுக்கத்தக்க வகையிலும நிர்வாண புகைப்படங்களாக மாற்றி அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளதாக கொடுத்த புகாரின் பேரில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சைபர் கிரைம் அவர்கள் தலைமையில் இயங்கி வரும் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக குற்றவாளியை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
மேற்படி குற்றச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ததில் பெண்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படங்களை திருடி அதில் Al (Artificial Intelligence) தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி அந்த பெண்களின் புகைப்படங்களை நிர்வாண புகைப்படங்களாக மாற்றி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது உண்மை என தெரியவந்தது. மேற்கொண்டு தொடர் விசாரணை செய்த சைபர் கிரைம் போலீசாருக்கு மேற்படி ஆபாச பதிவை பதிவு செய்த நபர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது. மேற்படி குற்றவாளியை தனிப்படையினர் கைது செய்து அவரிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.இந்நிலையில் குற்றச்சம்பவம் தொடர்பாக குற்றவாளி யாரென்று கண்டறிந்து கைது செய்த தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். சமூகவலைதளங்களை பயன்படுத்தும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மிகவும் கவனமுடன் தங்களின் சமூகவலைதள கணக்குகளை சைபர் குற்றவாளிகள் எளிதாக தொடர்பு கொள்ளும் வண்ணம் இல்லாதவாறு மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். மேலும், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்