திருவள்ளூர் : காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்தை பழவேற்காடு வழியே சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த புதுவாயல் பகுதியில் இருந்து பழவேற்காடு வரையிலான சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. சின்னக்காவனம் கிராமத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பல வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் விநாயகர் கோவில் ஒன்றும் இடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் ஒன்று திரண்டு கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவிலை இடிக்க திட்டமிட்டுள்ளதை கண்டித்து பொதுமக்கள் பேரணியாக நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட திரண்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 150 ஆண்டு பழமையான கோவில்கள் தங்களது கிராமத்தில் இருப்பதாகவும் சாலை விரிவாக்க பணிகளுக்காக கோவிலை இடிப்பதை ஏற்க முடியாது எனவும், மாற்று வழியில் சாலையை திட்டமிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர். மாற்று வழியில் சாலை பணிகளை மேற்கொள்ளாவிடில் கோவிலுக்கு மாற்றி இடம் ஒதுக்கி அரசே கோவிலை கட்டித்தர வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து பேரணியாக செல்ல முயன்ற பொதுமக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி போராட்டக் குழு பிரதி நிதிகளில் சிலர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மனு அளிக்குமாறு கூறினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு