திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பூங்குளம் ரெட்டிப் பாளையத்தில் தலீத் வகுப்பைச் சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் கிராமத்திற்கு அருகாமையில் 6 ஏக்கர் அரசு நிலம் காலியாக உள்ளது. இந்த அரசு நிலத்தை பூங்குளம் ஊராட்சியில் உள்ள சின்ன மாங்கோடு எனும் மீனவ கிராம மக்களுக்கு வழங்குவதற்கு பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் அனுமதி வழங்கப்பட்டு அதனை அளப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனைக் கண்டு ரெட்டிபாளையம் கிராம தலித் மக்கள் தங்கள் கிராமத்திலேயே பல குடும்பங்கள் நிலம் வீடு இல்லாமல் இருப்பதால் அதனை தங்கள் கிராமத்திற்கு வழங்க வேண்டும் என பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு துறை அலுவலகங்களுக்கு மனு அளித்திருந்தனர். ஆனால் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் சின்ன மாங்கோடு மக்களுக்கு ஆதரவாக மீண்டும் நிலத்தினை அளக்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தது.
இதனை ரெட்டிபாளையம் கிராம தலித் பெண்கள் நிலத்தை அளக்கும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அப்போது சின்ன மாங்கோடு கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் சிலர் ரெட்டிபாளையம் தலித் கிராம பெண்களை சாதியல் ரீதியான வார்த்தைகளை பயன்படுத்தியும் மோசமான வார்த்தைகளால் திட்டியும் ஒரு கட்டத்தில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியும் உள்ளனர். இது குறித்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி அலுவலகத்தில் பெண்கள் புகார் அளிக்க சென்றுள்ளனர். அங்கு புகாரினை பெறுவதற்கு யாரும் முன் வராத காரணத்தால் திரும்பவும் தங்களது கிராமத்திற்கு திரும்பி சென்று உள்ளனர்.
இது குறித்து பொன்னேரி வருவாய் கோட்ட அலுவலகத்தில் புகார் அளிக்க கிராம மக்கள் ஒன்று சேர்ந்து வந்து முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து பொன்னேரி வட்டாட்சியர் சிவகுமார் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வகுமார் ஆகியோர் கிராம மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். வட்டாட்சியர் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு