கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆனந்தூர் ஏரியில் மண் கடத்துவதாக மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கலெக்டர் அவர்களின் உத்தரவின்படி ஊத்தங்கரை தாசில்தார் மற்றும் அலுவலர்கள் மண் கடத்திய இடத்தில் சோதனை செய்து குற்றவாளிகளிடம் விசாரிக்க முயன்ற போது தாசில்தார் மற்றும் அலுவலர்களின் மீது பொக்லைன் ஏற்றி கொல்ல முயன்று கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேற்கண்ட சம்பவம் தொடர்பாக போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கின் குற்றவாளிகள் மேலும் பல குற்ற செயல்களில் ஈடுபடலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை அவர்களின் பரிந்துரையின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்களிடம் உத்தரவு பெற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
















