காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியில் கரும்பாக்கம், அண்ணா நகரை சேர்ந்த ஆபேல் 65 என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று நள்ளிரவு 2 மணியளவில் முகமூடி அணிந்து 4 பேர் கும்பல் திடீரென அங்கு வந்தனர். அவர்கள் காவலாளி ஆபேலை சரமாரியாக தாக்கினர். அவரை சத்தம் போடக்கூடாது என்று மிரட்டல் விடுத்து கைகளை கட்டினர்.
பின்னர் காவலாளி ஆபேலை அருகில் உள்ள கழிவறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து கொள்ளை கும்பல் கடப்பாரையால் வங்கியின் பின்பக்க சுவரை துளையிட்டு உடைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனால் கொள்ளை திட்டத்தை கைவிட்டு கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இன்று அதிகாலை அவ்வழியே பொதுமக்கள் சென்றபோது காவலாளி ஆபேலின் முனகல் சத்தம் கேட்டு அங்கு சென்றனர். அப்போது தான் கொள்ளை கும்பல் ஆபேலை கழிவறையில் கட்டிப்போட்டு வங்கியில் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து சாலவாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் தாக்கியதில் காவலாளி ஆபேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது.அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொள்ளையர்களின் திட்டம் பலிக்காததால் வங்கியில் இருந்த பல லட்சம் பணம், நகை தப்பியது. கொள்ளையர்கள் சுவரில் துளைபோட முயன்ற போது ஆட்கள் நடமாட்டத்தை கண்டு தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து கொள்ளையில் ஈடுபட முயன்ற கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.