திருநெல்வேலி: கடந்த 2014-ம் ஆண்டு களக்காடு காவல் நிலைய சரகம் கோவிலம்மாள்புரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் அவரது அக்காவான பொன்னம்மாள் என்பவரை சேரன்மகாதேவியை சேர்ந்த பாலையா 52, என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து இருவரும் கோவிலம்மாள்புரத்தில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில் பாலையா வேலை செய்த பணத்தை மனைவியிடம் கொடுக்காமல் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்ததை பொன்னம்மாளின் அண்ணன் நம்பி 62. மற்றும் அவரது மகன் ரமேஷ் 21. சேர்ந்து கண்டித்துள்ளனர்.
இதனை மனதில் வைத்துக் கொண்டு பாலையா நம்பி மற்றும் ரமேஷை கத்தியால் குத்தி கொலை செய்தும் நம்பியின் மனைவி நம்பியம்மாளை கத்தியால் குத்தி காயப்படுத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாலகிருஷ்ணன் களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பாலையாவை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று 01.03.2022 வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி திருமதி. ஜெசிந்தா மார்ட்டின் அவர்கள் குற்றவாளி பாலையாவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 20.ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்று கொடுத்த களக்காடு காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டினார்.