அரியலூர்: அரியலூர் மாவட்டம், வெங்கனூர் அருகேயுள்ள கோவில் எசனை வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் மனோகருக்கும் (44). அதே தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் விஜயகாந்த்(37). என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இது சம்பந்தமாக கிராம முக்கியஸ்தர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர். பின்னர் விஜயகாந்த் தனது மனைவி, குழந்தைகளுடன் சென்னைக்கு சென்றுவிட்டார். அங்கு நான்கு ஆண்டுகள் தங்கியிருந்து, குடும்பத்துடன் மீண்டும் ஊர் திரும்பியுள்ளனர்.இந்நிலையில், கடந்த (19.04.2023) அன்று இரவு விஜயகாந்த் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்த கௌதமியிடம், மது போதையில் வந்த மனோகர் தகராறில் ஈடுபட்டுள்ளார். மறுநாள் காலை (20.04.2023) வேலை முடிந்து வீட்டுக்கு வந்த விஜயகாந்திடம், நடந்த சம்பவங்கள் குறித்து கௌதமி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகாந்த், அய்யனார் கோயில் அருகே பொதுமேடையில் படுத்திருந்த மனோகரை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்தார். இது குறித்து வெங்கனூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, விஜயகாந்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர்வாலாண்டினா அவர்கள் குற்றவாளி விஜயகாந்த்துக்கு, (07.07.2025) ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து விஜயகாந்த் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.