திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன், இ.கா.ப., பொதுமக்களுக்கு கைபேசி வாயிலாக நடக்கும் புதிய வகை மோசடி தொடர்பாக செய்தி குறிப்பு ஒன்று கீழ்கண்டவாறு வெளியிட்டுள்ளார். “கைபேசி வாயிலாக அறிமுகமில்லாத எண்ணிலிருந்து உங்களைத் தொடர்பு கொண்டு, வெளிமாநில குற்றப்பிரிவு போலீசார் பேசுவதாகவும், உங்களது கைப்பேசி எண் மற்றும் வங்கிக்கணக்கு எண் போன்றவற்றை பயன்படுத்தி சட்டவிரோத பண மோசடி நடந்திருப்பதாக கூறுவர். பின்னர், உங்களது ஆதார் மற்றும் பான் கார்டு புகைப்படங்களை வாட்ஸ்ஆப்பில் அனுப்புமாறு கேட்டுப்பெறுவதுடன், பணமோசடி வழக்கில் விரைவில் நீங்கள் கைது செய்யப்படுவதாக கூறி போலியான கைது ஆணையை அனுப்புவர்.
அதைத் தொடர்ந்து, ஐ.பி.எஸ். அதிகாரி என வீடியோ காலில் வரும் நபர் கைதில் இருந்து தப்பிக்க வேண்டுமெனில் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்ய வேண்டும் எனக்கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபடுவர். பின்னர் நீதிபதி போல் உடையணிந்து விடியோ காலில் வரும் நபர் உங்களை பிணையில் எடுக்க குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என உங்களை பயமுறுத்தி மிரட்டி அதிகளவில் பணத்தை மோசடி செய்யக்கூடும். இது போன்று பேசும் நபர்களிடம் உங்களது தனிப்பட்ட தகவல்கள், அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்களை பகிர வேண்டாம். இது போன்ற சைபர் குற்றம் நடைபெற்றால் 1930 என்ற எண்ணில் புகார் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்