சென்னை: சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அசோக் குமார் (38). கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை உறவினர் ஒருவரது திருமணத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மீஞ்சூர் வந்துள்ளார். அன்று அசோக் குமார் வீடு திரும்பாததால் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டதால் அசோக் குமார் காணாமல் போனதாக மீஞ்சூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மீஞ்சூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்ட போது கழிவு நீர் கால்வாயில் ஆண் சடலம் ஒன்று கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் கடந்த 2நாட்களுக்கு முன் காணாமல் போன கூலி தொழிலாளி அசோக் குமார் என்பது உறுதியானது. இதனையடுத்து சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமண நிகழ்ச்சிக்கு வந்த போது மதுபோதை அதிகரித்து கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது யாரேனும் அடித்து கொலை செய்தனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு