திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கரடிப்புத்தூர் கிராமத்தில் சென்னை வெளிவட்ட சாலை மற்றும் சென்னை எல்லை சாலை பணிகளுக்காக செம்மண் குவாரிக்கு அண்மையில் கனிமவளத்துறை அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராமத்தில் உள்ள மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை வைத்து வருவதாகவும் தற்போது குவாரி செயல்படத் தொடங்கினால் அங்கு தங்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைக்காது என்பதால் குவாரி செயல்படக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக இன்றும் கிராம நிர்வாக அலுவலகம் முன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் கலைந்து செல்ல மறுத்ததால் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்தனர்.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. பொதுமக்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து பேருந்தில் ஏற்றிய நிலையில் பெண் ஒருவர் பேருந்திலேயே புடவையால் தூக்கு மாட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தேர்தலில் இருந்த பெண் காவலர் அவரை சமாதானம் செய்து அப்புறப்படுத்தினார். கிராம மக்கள் சுமார் 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு திரும்ப மண்டபத்தில் அடைக்கப்பட்ட நிலையில் ஒரு தரப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திரைப்பட இயக்குனர் கோபி நயினார் மக்களுடன் இணைந்து குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு