திருப்பூர்: திருப்பூரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி தேவி 27. இவர்களது மகள் தர்ஷனா 2.
தேவி தனது குழந்தையை வளர்க்க முடியாததால் ரூ.30 ஆயிரம் பணத்துக்காக முக்கூடல் அருகே உள்ள மயிலப்புரத்தை சேர்ந்த ஜான் எட்வர்ட் அற்புதம் தம்பதிக்கு விற்றார்.
இதற்கிடையே கர்ப்பிணியாக இருந்த தேவி தனது 2-வது குழந்தை பிறந்தாலும் அதனை வளர்க்க முடியாது என்று நினைத்து அதே பகுதியை சேர்ந்த மார்க்ரெட் தீபா என்ற பெண்ணின் உதவியுடன் தென்காசியை சேர்ந்த அமலா பாத்திமா-ஜெபஸ்டின் தம்பதிக்கு ரூ.1½ லட்சத்துக்கு பேசி உள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சுரேசுக்கு தகவல் கிடைத்தது. அவர் அளித்த புகாரின் பேரில் முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் குழந்தைகளை பணத்துக்காக விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 குழந்தைகளையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக தேவி உள்பட 7 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 149(சட்ட விரோதமான கும்பலில் உள்ள ஒவ்வொருவருக்கும் தண்டனை), 370, 317 (12 வயதிற்குட்பட்ட குழந்தையை அவரது பெற்றோர் நிராதரவாக விடுதல்) உள்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே போலீசார் தங்களை தேடுவதை அறிந்து தேவி திருப்பூருக்கு தப்பிச் சென்றார். மேலும் இதில் தொடர்புடைய 6 பேரும் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.