திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (19). இவர் தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஞாயிறு விடுமுறை நாளான இன்று தமது நண்பர்களுடன் மீன் பிடிக்க சென்ற ஜெகன் குளத்தில் தவறி விழுந்து மாயமாகியுள்ளார். இது குறித்து ஜெகனின் நண்பர்கள் அளித்த தகவலின் பெயரில் பொன்னேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாயமான கல்லூரி மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமான நிலையில் இருள் சூழ்ந்து காணப்பட்ட குளத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ரப்பர் படகு உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் மாயமான கல்லூரி மாணவரை தீவிரமாக தேடினர். சுமார் 4மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சேற்றில் சிக்கிய கல்லூரி மாணவர் ஜெகன் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீன்பிடிக்க சென்ற மாணவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு