மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டான்குடி கிராமத்தை சேர்ந்த தாய் நீலாதேவி (47) இவரது மகள் அகிலாண்டேஸ்வரி (22) இருவரும் நேற்றிரவு தங்களது வீட்டில் உறங்கி கொண்டிருந்தனர்.
அப்போது வீடு புகுந்த ஒரு கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பியோடினர்.
தாய் மகள் அலறல் சத்தம் கேட்டு போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த மேலூர் டி.எஸ்.பி ரகுபதிராஜா சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.
மேலும் தகவலறிந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.
இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது, “உயிரிழந்த நீலாதேவிக்கு இரு மகள்கள் உள்ளன. அதில் மூத்த மகள் மகேஸ்வரி, இளைய மகள் அகிலாண்டேஸ்வரி இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் இளைய மகள் அகிலாண்டேஸ்வரி திருமணமான 6 மாதங்களில் விவகாரத்து பெற்று தாயுடன் பதினெட்டான்குடியில் வசித்து வருகின்றார்.
இந்த நிலையில் மூத்த மகள் மகேஸ்வரியின் குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மகேஸ்வரியை தாய் நீலாதேவியும், அகிலாவும் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று நள்ளிரவு தாயும், இளைய மகளும் உயிரிழந்துள்ளனர்.இந்த கொலை நிகழ்வில் முத்த மகளுக்கு சம்பந்தம் உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.